2 ஜி அலைக்கற்றை பயணத்தில் தாம் கரையாமலிருக்க பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என ஆ.ராசா உணர்வுப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.
2ஜி வழக்கில் இருந்து விடுதலையான நிலையில், திமுக தலைவருக்கு ஆ.ராசா எழுதியுள்ள கடிதத்தில், நன்றியுணர்ச்சியோடு தீர்ப்பை காலடியில் வைத்து வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். அலைவரிசைப் புயலின் கோரத்தாக்குதல் தனிமனிதர்களை மட்டுமல்ல, தத்துவார்த்தமுள்ள ஒரு இயக்கத்தையும் களங்கப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
சிறையில் இருந்தபோது கருணாநிதியும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் தலைநகருக்கே வந்து ஊட்டிய நெஞ்சுரம் தன்னை இறுக்கத்தில் இருந்தும், மனஅழுத்தத்தில் இருந்தும் மீட்டது என கடிதத்தில் ஆ.ராசா தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்திட, அலைக்கற்றை தாக்குதல் தனிமனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, சிபிஐ, மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்களால் நிகழ்த்தப்பட்டவை என்றும், இதனை அப்போது ஆட்சியில் இருந்த அரசே அறியமுடியாமல் போனது தான் அவலம் என்றும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மாநில கட்சியான திமுகவின் இந்திய அரசியல் ஆளுமையை, பொறுத்துக்கொள்ள முடியாமல் சில ஆதிக்க சக்திகள், இதன் பின்னணியில் இருந்தது அனைவரும் அறிந்ததே எனவும் குறிப்பிட்டுள்ளார். குறைகூறிய எவருக்கும் நெஞ்சம் என்ற ஒன்றே இல்லை என்றாலும், நீதி நமக்கு கிடைத்திருக்கிறது எனவும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.