குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்.
குஜராத் மாநிலத்தில் ஓபிசி தலைவராக அரியப்பட்ட அல்பேஸ் 2017இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவி பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. அல்பேஷ் பதான் மாவட்டத்தின் ராதன்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு அல்பேஷ் தாக்கூருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது.
அதனையடுத்து, மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் அல்பேஷ். இருப்பினும் அவர் எம்.எல்.ஏ ஆக தொடர்ந்தார். கடந்த ஜூலை 5 ஆம் தேதி அல்பேஷ் தாக்கூர் மற்றும் பேயட் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ தவல் சிங் ஸாலா இருவரும் குஜராத் பாஜக துணைத் தலைவர் நிதின் படேலை சந்தித்தனர். அப்போதே, அவர்கள் இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்களான அல்பேஷ் தாக்கூர் மற்றும் ஸாலா இருவரும் இன்று குஜராத் பாஜக தலைவர் ஜித்து வஹானி தலைமையில் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சி தன்னை ஒதுக்கிவைத்து அவமானப்படுத்திவிட்டதாக அல்பேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 104 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலம் 71 ஆக குறைந்துள்ளது.