தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த 13 மாதங்களும் மிக நெருக்கடியானதாக இருந்தது என முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சூரியமின் உற்பத்தி வசதி துவக்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தில் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த ஓராண்டில் தமிழக வரலாறு, கலாசாரம், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது அதிக பற்று கொண்டதாகவும், அதன் விளைவாகவே திருவள்ளுவர், அவ்வையார் சிலைகளை ஆளுநர் மாளிகையில் அமைத்ததாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தமிழகம் பெரும் பிரச்னைகளை சந்தித்த நிலையில், ஆளும் கட்சியின் தலைவர்களுடன் தனக்கு நல்லுறவு நீடித்ததாகவும் அவர் கூறினார். தனது முடிவுகள் மீது எதிர்க்கட்சியினர் அதிருப்தி கொண்ட சம்பவங்கள் நடந்தாலும், ஒருபோதும் அவர்கள் தன்னை அவமதித்ததில்லை என்றும் வித்யாசாகர்ராவ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.