திண்டுக்கல்லில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனத்துறை அலுவலக உதவியாளர் மதுபோதையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் குமார். இவர் கரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணியில் இருக்கும்போது பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், திண்டுக்கலில் உள்ள தலைமை வனத்துறை அலுவலகத்திற்கு மது போதையில் வந்த குமார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனக்கு பாதி சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.