கால்நடை தீவன முறைகேடு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவன முறைகேடு விவகாரத்தில் லாலு பிரசாத் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தியோஹர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89.27 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 2வது வழக்கு ராஞ்சியில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் கடந்த 13ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த வழக்கில் 34பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் 11பேர் உயிரிழந்தனர். ஒருவர் அப்ரூவர் ஆனார். இதனையடுத்து லாலு பிரசாத் உள்பட 15பேர் குற்றவாளிகள் என கடந்த 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு வெளியான உடனேயே பாட்னா அருகேயுள்ள பிர்ஸா முண்டா சிறைச்சாலையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டார். இதனையடுத்து தண்டனை விவரம் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3,4,5 என அடுத்தடுத்த மூன்று நாட்களில் தண்டனை அறிவிப்பு தள்ளிப் போனது. நேற்றைய விசாரணையின் போது லாலு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வயது முதிர்வையும், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு குறைவான தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. லாலு பிரசாத் சிறையில் இருந்து வீடியோ கான்பிரஸ் மூலம் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெறலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் விவகாரத்தில் லாலு பிரசாத் மீது இன்னும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தம் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் இரண்டு வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லாலு ஜாமீன் கிடைக்காமல் முழு தண்டனையை அனுபவிக்கும் பட்சத்தில் அவரால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்க முடியாது.