5 மாநில தேர்தல்: 2016-ல் வாகை சூடியவர்கள் யார் யார்? - ஒரு ஃப்ளாஷ்பேக் பார்வை

5 மாநில தேர்தல்: 2016-ல் வாகை சூடியவர்கள் யார் யார்? - ஒரு ஃப்ளாஷ்பேக் பார்வை

5 மாநில தேர்தல்: 2016-ல் வாகை சூடியவர்கள் யார் யார்? - ஒரு ஃப்ளாஷ்பேக் பார்வை
Published on

தற்போது நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில தேர்தல்களில், கடந்த முறை 2016இல் வெற்றி வாகை சூடியது யார்? எதிர்க்கட்சி யார்? மற்ற கட்சிகளின் நிலை என்ன? முழுமையான தொகுப்பு...

மேற்கு வங்கம்:

1948 முதல் 1977 வரை தொடர்ச்சியாக 29 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும், 1977 ஆம் ஆண்டு முதல் 2011 வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் இடதுசாரிகளும் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தை முதன்முறையாக 2011 இல் மம்தா பானர்ஜி கைப்பற்றினார். பின்னர் 2016 ஆம் ஆண்டிலும் திரிணாமுல் காங்கிரஸே வெற்றிவாகை சூடியது. 294 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில், 2016 ஆம் ஆண்டில் 211 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 32 தொகுதிகளும், பாஜக 6 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றனர். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கிறார்.

கேரளா :

2011 முதல் ஆட்சியில் இருந்த காங்கிரஸை வீழ்த்தி 2016இல் சிபிஎம் கூட்டணி ஆட்சியமைத்தது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 91 இடங்களை இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றது. இதில் சிபிஎம் 58 தொகுதிகள், சிபிஐ 19 தொகுதிகள், மதசார்பற்ற ஜனதா தளம் 3, தேசியவாத காங்கிரஸ் 2, எல்டிஎப் 5, காங்கிரஸ்(எஸ்) 1, கேரள காங்கிரஸ் 1, ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு பார்ட்டி 1, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் பார்ட்டி 1 தொகுதிகளை வென்றனர்.

காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 22 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 18, கேரள காங்கிரஸ்(எம்) 6, கேரள காங்கிரஸ்(ஜேக்கப்) 1 இடங்களில் வென்றனர். இந்த தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக 1 இடத்தில் வெற்றிபெற்றது, சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றார். தற்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார்.

தமிழ்நாடு :

தமிழகத்தில் 2011இல் ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவே, மீண்டும் 2016-யிலும் வெற்றிவாகை சூடினார். 2016 தேர்தலில் எந்த பெரிய கட்சியையும் கூட்டணியில் சேர்க்காமல் தனித்தே போட்டியிட்டார் ஜெயலலிதா, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டதால் 232 தொகுதிகளில் களம் கண்ட அதிமுக 134 தொகுதிகளில் வென்றது, இந்த கூட்டணியில் இடம்பெற்று வென்ற மக்கள் ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்து புலிகள் கட்சி ஆகியவையும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தலா ஒரு தொகுதியில் வென்றது. திமுக கூட்டணியில் திமுக 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும்,ஐயுஎம்எல் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றனர். 2016 இல் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்வரானார்,அவரின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் சில மாதங்கள் முதல்வராக இருந்தார், அதன்பின்னர் 2017 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியில் உள்ளார்.

அசாம்:

2011 இல் ஆட்சியிலிருந்த காங்கிரஸை வீழ்த்தி பாஜக முதன்முறையாக அசாமில் ஆட்சியமைத்தது. மொத்தமுள்ள 126 இடங்களில் பாஜக கூட்டணியில் பாஜக 60 இடங்களையும், அசாம் கன பரிசத் 14 தொகுதிகளையும், போடோலாந்து மக்கள் முன்னணி 12 இடங்களையும் வென்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 26 இடங்களை வென்றது, தனித்து போட்டியிட்ட அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 13 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றனர். அசாமில் தற்போது பாஜகவின் சார்பில் சர்பானந்த சோனோவால் முதல்வராக உள்ளார்.

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2011 முதல் ஆட்சியில் இருந்த என்.ஆர் காங்கிரஸை வீழ்த்தி 2016 இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது, வி.நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார்.  30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் 2016 ஆம் ஆண்டில் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடத்திலும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களிலும், அதிமுக 4 இடத்திலும் வென்றனர், ஒரு சுயேட்சையும் வெற்றி பெற்றார். காங்கிரஸை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் பதவி விலகியதால் கடந்த மாதம் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைக்க்ப்பட்டு, தற்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.

-வீரமணி சுந்தரசோழன்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com