சென்னை மதுரவாயல் அருகே பட்டாசு தீப்பொறி பட்டு அடுத்தடுத்து 6 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரவாயலில் பட்டாசு தீப்பொறிப்பட்டு 6 குடுசை வீடுகள் தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் ,அம்பேத்கர் நகர் பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் சேகர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அருகில் இருந்த 6 வீடுகளுக்கும் தீ பரவியது. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து உடனடியாக மதுரவாயல், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர் ஆகிய மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 6 குடிசை வீடுகளும் தீயில் கருகியது.
இதேபோல் சென்னை போரூர் அருகே தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுருந்த விளம்பரம் போர்டு பட்டாசு தீப்பொறி பட்டு தீப்பற்றியது. பின்னர் மதுரவாயல் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.