கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே அமமுகவினர் பட்டாசு வெடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால் தமிழகமே உற்றுநோக்கக் கூடிய தொகுதியாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு கோவில்பட்டி ராஜீவ்நகர், இ.பி.காலனி பகுதியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தனது ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கார் மந்திதோப்பு சாலையில் அன்னை தெரசா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தென்மண்டல செயலாளர் மாணிக்கராஜா வருகை தந்தார். அவரை வரவேற்று தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.
அப்போது ஒருவர் பட்டாசை அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே பற்ற வைத்தார். இதனால் சிறிது நேரம் பட்டாசு வெடித்த புகைக்குள் கார் சிக்கிக் கொண்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அமைச்சரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் அதிமுக, அமமுக தொண்டர்கள் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது.
ஆனால் போலீசார் இருதரப்பினரையும் அமைதிபடுத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது