கொரோனா பெருந்தொற்று கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை பல ஆண்டுகள் பின்னுக்குத்தள்ளிவிட்ட சூழலில், வாடகை வாகன ஓட்டுநர்களின் நிலையும் சிரமத்திலேயே இருக்கிறது. அந்தவகையில், சென்னையில் ஆட்டோவுக்கு மாதத்தவணை செலுத்தாதவர்கள் வட்டி கட்ட வேண்டும் என நிறுவனங்கள் வலியுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது
கொரோனா நெருக்கடி, பல துறைக்கும் ஏற்பட்டதுபோல் ஆட்டோ ஒட்டுனர்களுக்கும் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 70 ஆயிரம் ஆட்டோ ஒட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் இருக்கின்றனர். சாலையில் ஆட்டோ ஒடினால் தான் வருமானம் என்ற நிலையில் , 3 மாதத்திற்கு மேலாக வருமானம் இன்றி சிக்கலில் தவித்து வருகின்றனர். இதில் 3 மாதத் தவணை கட்டாதவர்கள் அதற்கான வட்டியை கட்டாயம் கட்ட வேண்டும் என கடன் நிறுவனங்கள் வலியுறுத்துவதாக கூறுகின்றனர்
பொது முடக்கத்திற்கு முன்பே எதிர்பார்த்த வருமானமோ, சேமிப்போ இல்லாத நிலையில், வீட்டு வாடகை, மருத்துவ செலவு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என பெரும் சுமையை எதிர் கொண்டு இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடைகள் திறக்க தளர்வு அளித்ததுபோல் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆட்டோ இயக்குவதற்கும் அனுமதி அளித்தால்தான் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆட்டோ ஒட்டுநர்கள்.