காதல் உறவில் ஏமாற்றப்படுவதும், அது அந்த உறவு முறிவை சந்தித்ததும் இங்கு பெரும்பாலானோருக்கு ஒருவித வடுவையே கொடுக்கும். பிரேக்கப்பை சந்திப்பவர்கள் பொதுவாக அமைதியை நாடிச் செல்வார்கள் அல்லது அந்த உறவில் இருந்து கடந்து செல்ல முயற்சிப்பார்கள்.
ஆனால் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் உறவை தொடர்ந்த காதலனின் செயலை ஊருக்கே தெரியப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த செயல் அனைவரையும் வியப்படையச் செய்திருக்கிறது.
அதன்படி Mackay and Whitsunday என்ற உள்ளூர் செய்தித்தாளில் தனக்கு நடந்த பிரேக்கப் பற்றியும், காதலன் ஏமாற்றியதையும் முழுப்பக்க விளம்பரமாக கொடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கிறார் ஜெனி என்ற பெண்.
அதில், “டியர் ஸ்டீவ், அந்த பெண்ணுடன் நீ சந்தோஷமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். ஆனால் நீ ஒரு கேவலமான ஏமாற்றுக்காரன் என்பதை இப்போது இந்த ஊருக்கே தெரிய வந்திருக்கும். இப்படிக்கு ஜெனி. குறிப்பு: இந்த விளம்பரத்துக்கான பணத்துக்கு உன்னுடைய கிரெடிட் கார்டைதான் பயன்படுத்தியிருக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த விளம்பர பதிவு குறித்தது Mackay and Whitsunday செய்தி நிறுவனத்துக்கு எண்ணற்ற வந்தை தொடர்ந்து செய்தித்தாளின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெனியின் விளம்பரத்தை பகிர்ந்ததோடு, “Mackay Life செய்தித் தாளின் 4வது பக்கத்தில் போடப்பட்ட விளம்பரம் குறித்து ஏகப்பட்ட மெசேஜ்கள், அழைப்புகள் எங்களுக்கு வந்திருக்கிறது.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இங்கே சிலவற்றை குறிப்பிடுகிறோம். அதில், எங்களுக்கு ஸ்டீவ் யார் என தெரியாது, அவர் ரொம்ப மோசமானவாராக இருந்திருக்கிறார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். ஜெனியை பற்றியை எந்த தகவலையும் வெளிப்படுத்த மாட்டோம். கிரெடிட் கார்டு மூலம் விளம்பரத்துக்கு நாங்கள் கட்டணம் வசூலிக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பதிவை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்ததோடு, பதிவின் கமெண்ட்ஸில் எக்கச்சக்கமான நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அதில், “நான் ஜெனிக்கு ஆதரவாக அவரது பக்கம் இருக்கிறேன்” , “ஸ்டீவ்வை போன்ற பலரும் தற்போது தங்களுடைய கிரெடிட் கார்டை செக் செய்திருப்பார்கள் என தெரிகிறது” என பலரும் கிண்டல் செய்தும் பதிவிட்டிருக்கிறார்கள்.