18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்தியநாராயணன், நேற்று முந்தினம் தீர்ப்பளித்தார். 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் சட்டமீறல் இருப்பதாக தெரியவில்லை என அவர் கூறினார். ஏற்கெனவே இந்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அளித்த தீர்ப்பை சாராமல் தன்முன் வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த தீர்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இல்லையா? என தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு செய்யப்படும் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அதன்படி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் நேற்று மதுரையில் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் வரும் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக புதிய தலைமுறைக்கு தங்கத் தமிழ்ச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 10ஆம் தேதி 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 18எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து 18 பேர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் சபாநாயகர் தனபால் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது என்பதற்காக இந்த மனு தாக்கல் செய்வது சட்ட நடைமுறையாக உள்ளது.