மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவரது கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர், அதே பகுதியில் பல ஆண்டுகளாக மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்தியாவில், அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, நோச்சுரோபதி அண்ட் யோகா படித்த மருத்துவர்கள் மட்டுமே இந்திய மருத்துவத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள்தான், அரசாங்கத்தால் பதிவு பெற்ற ஒரிஜினல் மருத்துவர்கள்.
இவர்களைத்தவிர, மற்ற மருத்துவர்கள் போலி மருத்துவர்கள்தான். விஜயகுமாரி இதில் எந்த மருத்துவப் படிப்பையும் படிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.. வெறும், நர்சிங் படிப்பை மட்டும் படித்துவிட்டு போலியாக தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி வருவாய் மற்றும் காவல்துறையினர் போலி மருத்துவர் விஜயகுமாரியை கைது செய்து கிளினிக்காக செயல்பட்டு வந்த கடைக்கும் சீல் வைத்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களோடு, முதன்மை மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணன், மருத்துவக் குழுவினர், காட்பாடி வட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.