Fact Check : மீம் டெம்ப்ளேட்டான "உலகின் தனிமையான வீடு” பற்றிய ரகசியம் தெரியுமா?

Fact Check : மீம் டெம்ப்ளேட்டான "உலகின் தனிமையான வீடு” பற்றிய ரகசியம் தெரியுமா?
Fact Check : மீம் டெம்ப்ளேட்டான "உலகின் தனிமையான வீடு” பற்றிய ரகசியம் தெரியுமா?
Published on

டிவி, ஃபோன், வைஃபை என எந்த பொழுதுபோக்கு வசதிகளும் இல்லாமல் தீவு ஒன்றின் நடுவே குன்றில் இருக்கும் வீட்டைக் குறிப்பிட்டு இங்கு ஒரு வாரமாவது இருக்க முடியுமா? என்றெல்லாம் மீம் பதிவுகள் சமூக வலைதளங்களில் எப்போதும் பரவுக் கொண்டிருக்கும்.

இப்படியெல்லாம் ஒரு வீடு இருக்குமா? கண்டிப்பாக இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படமாகத்தான் இருக்கும் என்றெல்லாம் பேச்சுகள் எழுவதும் வாடிக்கையே. ஆனால் உண்மையிலேயே நாலாப்புறமும் கடலால் சூழப்பட்டுள்ள மலையில் நட்டநடுப் பகுதியில் வெள்ளை நிறத்திலான அந்த வீடு ஐஸ்லாந்தில் உள்ள தீவில்தான் இருக்கிறது.

இந்த வீட்டை ”உலகின் தனிமையான வீடு” என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தின் தெற்கே இருக்கக் கூடிய தீவுப்பகுதிதான் எல்லிஓய்யி (Elliðaey). இங்குதான் அந்த வீடு அமைந்திருக்கிறது.

இந்த வீட்டின் பின்னணியாக பல கட்டுக்கதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. அதன்படி 18 மற்றும் 19ம் ஆண்டின் போது இந்த அழகான தீவில் மக்கள் வாழ்ந்து வந்ததாகவும், 1930ம் ஆண்டின் போது தீவில் வசித்து வந்த மக்களெல்லாம் நகர வாழ்க்கைக்காக இடம்பெயர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல, இந்த தீவில் இருக்கும் ஒற்றை வீட்டை 100 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவர் அணு ஆயுதப் போர் அல்லது ஸாம்பிகளின் பேரழிவுக்கு பிறகு இங்கு வந்து தங்குவதற்காக கட்டப்பட்டதாகவும், அரசாங்கத்திடம் இந்த தீவையே வாங்குவதற்காக முற்பட்டதாகவும் மற்றொரு புறம் தகவல்கள் கூறப்படுகின்றன. இதுபோக சமூகத்திடம் இருந்த எல்லாம் ஒட்டும் உறவையும் துறந்த ஒருவர் மதத்துறவியான பிறகு இந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் ஒரு கருத்து இருக்கின்றன.

ஆனால் இவை எதுவும் நிரூபிக்கப்படாத கட்டுக்கதைகளாகவே இருந்தன. இப்படி இருக்கையில் இந்த தீவு வீடு குறித்தும் இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் கார்மி க்றிஸ் என்ற பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விவரங்கள் மூலம் உண்மை புலப்படும்.

அதன்படி, 110 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட இந்த Elliðaey தீவு பஃப்பின்ஸ் என சொல்லக் கூடிய நோர்டிக் வகை உள்ளிட்ட பல கடற்பறவைகளின் வாழ்விடமாகவே இருக்கின்றன. இந்த தீவில் இருக்கும் வெள்ளை நிறத்தால் பெயின்ட் அடிக்கப்பட்ட வீடு 1950ம் ஆண்டின் போது எல்லிஓய்யி வேட்டை சங்கத்தால் வேட்டையாடும் விடுதியாகக் கட்டப்பட்டது. ஆகையால் பஃப்பின் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாட எப்போதாவது இப்பகுதிக்கு வரும் போது அவர்கள் தங்குவதற்கான இடமாகவே இந்த வீடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பியார்னி சிகர்ட்ஸன் (Bjarni Sigurdsson) என்ற யூடியூபர் குழு ஒன்று இந்த தனிமை வீட்டுக்குச் சென்று அங்கு தங்கி சமைத்து உண்ட வீடியோவை தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த வீட்டில் சோஃபா, பார்பிக்யூ, கேஸ் அடுப்பு, படுக்கைகள், மெத்தைகள் என எல்லா அத்தியாவசிய பொருட்களும் இருப்பது வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com