‘நமோ அப்’ தயாரித்த சில்வர்டச் நிறுவனத்திற்கு தொடர்பான 15 பக்கங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது.
தேர்தல் காலங்களில் தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுவது வழக்கம். இம்முறை தேர்தல் காலத்தில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைத்தளங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ட்விட்டர் தளம் இந்தியாவில் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது. அதேபோல ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்கள் அளிப்பதில் கட்டுபாடு விதித்துள்ளது. அத்துடன் போலி கணக்குகளை முடக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் ‘நமோ அப்’ தயாரித்த சில்வர்டச் நிறுவனத்தின் பக்கங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. இந்தப் பக்கங்கள் உள்ளூர் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கட்சிகளின் நடத்தை குறித்தும் பதிவிட்டு வந்துள்ளன. இப்பக்கங்கள் நம்பகத்தன்மையில்லாத முறையில் செயல்பட்டதால் இவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவுக்கு தொடர்பான 687 பக்கங்களை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் பக்கங்களும் நம்பகத்தன்மையில்லாத முறையில் செயல்பட்டதால் ஃபேஸ்புக் நிறுவனம் இவற்றை தளத்திலிருந்து நீக்கவுள்ளதாக கூறியிருந்தது.
மேலும் இந்தியாவிலிருந்து ஃபேஸ்புக் தளத்தில் செயல்பட்டு வந்த 227 பக்கங்கள் மற்றும் 94 கணக்குகள் அந்நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக நீக்கப்பட்டது. அதேபோல பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த 103 ஃபேஸ்புக் பக்கங்களையும் முடக்கியுள்ளது. இந்தப் பக்கங்கள் போலி கணக்குகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காஷ்மீர் குறித்த கருத்துக்களை பதிவிட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.