விமான நிலையத்தில் தமிழில் பேச கூறியதற்கு நீங்கள் இந்தியர்தானா என தன்னை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விவகாரம் அரசியல் ரீதியான புதிய சர்ச்சைகளையும் தொடங்கி வைத்துள்ளது.
விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் தன்னிடம் பேசிய மத்திய தொழிற் பாதுகாப்பு படை காவலரிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டதாகவும் அதற்கு அவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது என்றும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, விமான நிலையத்தில் மொழி குறித்து கேட்பது வழக்கத்தில் இல்லை என்று மத்திய தொழிற் பாதுகாப்பு படையான சிஐஎஸ்எஃப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்து கனிமொழியிடம் தகவல்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிஐஎஸ்எஃப் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் புதிய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை தற்போதே தொடங்கிவிட்டது என கனிமொழியின் ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி பாஜக பொதுச் செயலாளர் B.L.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
சந்தோஷின் இந்த கருத்தை விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமரிசித்துள்ளார். “சந்தோஷின் இந்த கருத்து ஆணவமானது. இதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். பெங்களூரு விமான நிலையத்தில் உங்களுக்கு இதே நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? சிஐஎஸ்எஃப் வீரரின் செயலுக்கு நடவடிக்கை எடுக்கப்பப்பட உள்ள நிலையில் இப்பிரச்னையை தேவையின்றி திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலானதாக மாற்ற சந்தோஷ் முயற்சிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சந்தோஷ் “இவ்விவகாரத்தில் கனிமொழி விளக்கம் அளித்த பின் உரிய நடவடிக்கைகள் இருக்கும். அதற்கு பின் ஆணவம் குறித்து விவாதிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.