11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் செய்வது தவறு என முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் மற்றும் திமுக கொறடா சக்கரபாணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், சபாநாயகரே நல்ல முடிவை எடுப்பார் எனக்கூறி இன்று முடித்து வைத்துள்ளது. மேலும், சபாநாயகர் முடிவு எடுக்க காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த தங்கத் தமிழ்செல்வன், “இந்தத் தீர்ப்பு விசித்திரமாக இருக்கிறது. சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் நீதிமன்றம் சென்றோம். இப்போது, மீண்டும் அங்கேயே செல்ல சொல்வது எப்படி. இன்று நாங்கள் நிதிநிலை அறிக்கை வாசிப்பில் உட்காந்திருக்க வேண்டும். எங்கள் 18 பேரை அதிரடியாக நீக்கம் செய்து விட்டார் சபாநாயகர். ஆனால், இந்த 11 எம்.எல்.ஏக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன்வரவில்லை. சபாநாயகர் உரிய முடிவை எடுக்க வேண்டும். அவர் மதிப்பை கூட்டிக்கொள்ள உச்சநீதிமன்றம் வாய்ப்பு தந்துள்ளது. சபாநாயகர் அதிகாரத்தை தாண்டிதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறுகையில், “அரசியல் சட்டத்தின்படி சபாநாயகர் 11 பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் எடுக்கவில்லை. இதேபோன்ற வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மணிப்பூர் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதை முன்னுதாரணமாக வைத்தே, இந்த வழக்கு தொடரப்பட்டது. கடந்த விசாரணையில் கூட 3 ஆண்டுகள் ஏன் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால் தற்போது சபாநாயகரே முடிவெடுப்பார் எனக்கூறி உள்ளது. பேரவை தலைவர் நடவடிக்கை எடுப்பார் என தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கிறார்கள். இதை நம்பி நீதிபதிகள் வழக்கை முடித்து வைக்கிறார்கள். எவ்வளவு நாட்கள் என அவர்களும் கேட்கவில்லை. இவர்களும் சொல்லவில்லை.
சட்டப்படி 7 நாள்களில் எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர்கள் நேரம் கேட்டால் கூடுதலாக 7 நாட்கள் கொடுத்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். பதிலில் திருப்தி இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மீண்டும் இந்த பிரச்னை இப்படியே இழுத்து செல்ல வழிவகை ஏற்பட்டு விட்டது என்றே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.