முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிட்டது. இதில் தினகரன் கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்காமல் படுதோல்வி அடைந்தது.
ஆனால் அதிமுக 9 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனால் கட்சி தங்களிடமே உள்ளது என ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் தரப்பினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதனால் அதிமுகவில் இருந்து வெளியேறி அமமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமமுகவில் இருந்த இன்பத்தமிழன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதே போல கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த இன்பத்தமிழன் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் பிற நிர்வாகிகள் உடனிருந்தனர்.