உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷம்லி, கவுதம புத்தர் நகர் , முசாபர்நகர், மீரட், காஜியாபாத், அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் ஷர்மா, சுரேஷ் ரானா, சந்தீப் சிங், கபில்தேவ் அகர்வால், அதுல் கர்க் மற்றும் சவுத்ரி லஷ்மி நரேன் உள்ளிட்ட 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதிபெற்றிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் உள்ள இந்த 11 மாவட்டங்களில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் பெரும்பாலும் இப்பகுதிகளில் இருந்து சென்றவர்களே. இதனால் முதல்கட்டத்தேர்தல் களத்தில் சாவல்கள் அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
2017 சட்டமன்றத் தேர்தலில், இந்த 58 தொகுதிகளில் 53 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி வென்றிருந்தது. சமாஜ்வாதிகட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 2 தொகுதிகளில் வென்றிருந்தன. ஒரு தொகுதியை ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி கைப்பற்றியிருந்தது.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் 412 கம்பெனி மத்திய துணை ராணுவப்படைகளை சேர்ந்த 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முசாபர்நகர், அலிகார் மற்றும் மீரட்டில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லைகளில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.