மக்களவைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் கட்சிகள் தீவிரமாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி, கடந்த 7 ஆம் தேதி 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், சோனியா ரேபரேலி தொகுதியிலும், ராகுல் அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் 21 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது. அடுத்து அசாம், தெலங்கானா, மேகாலயா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளுக்கு 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனையடுத்து கேரளா உள்ளிட்ட 27 தொகுதிகளுக்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் ஆன்டோ அந்தோணியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் அசாம், ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மேற்கு வங்கத்திலுள்ள ஜான்கிபூர் தொகுதியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் பல்லம் ராஜூ ஆந்திரா மாநிலம் காக்கிநாடா தொகுதியில் களம் காண்கிறார். இதுதவிர ஆந்திரா மாநிலத்திலுள்ள 132 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 36 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.