தேர்தல் சமயத்தில் மக்களை கவர அரசியல் கட்சிகள் ஆயுதமாகப் பயன்படுத்துவது தேர்தல் அறிக்கைகளைத்தான். ஒரே கூட்டணியில் உள்ள வெவ்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளின் தொகுப்பு.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஆட்சிக்கு வந்தால், என்னென்ன செய்வோம் என்ற வாக்குறுதியை அளிக்கும் தேர்தல் அறிக்கைகளில், எதிர்எதிர் அணிகளில் இருக்கும் கட்சிகள் இடையே முரண்பாடுகள் இருப்பது இயல்பானதுதான். ஆனால் ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியே வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும், சில அம்சங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன.
கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை முரண்பாடுகள்:
தமிழக அரசு வேலைவாய்ப்புகளிலும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும் 74 சதவிகிதம், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முரணாக திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 100 சதவிகிதம் என்ற விதி முழுமையாக பின்பற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவிகித வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
30 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என திமுக வாக்குறுதி அளித்துள்ளது. அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அறிக்கையில் எழுவர் விடுதலை குறித்த எந்த அம்சமும் இடம்பெறவில்லை.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்வித்துறை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறை என்று மட்டுமே குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, சிறிது சிறிதாக மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் தேசிய அளவில் மதுவிலக்கை செயல்படுத்த தமிழக அரசு குரல் கொடுக்கும் என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவுக்கு அடிமையானவர்கள் மது பழக்கத்தில் இருந்து விடுபடவும், மதுவிலக்கை படிப்படியாக மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று திமுக கூறியுள்ளது. எனினும் பூரண மதுவிலக்கு என்பது திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளது. ஒரே கூட்டணி என்றாலும், மதுவிலக்கு அவசியம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
அதிமுக - பாஜக முரண்பாடுகள்
அதிமுக தேர்தல் அறிக்கையில் இரு மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டணியில் உள்ள பாஜகவின் கொள்கை மும்மொழிக்கொள்கையாக இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு தாமதமின்றி ஆணையிட வேண்டுமென்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் நிலைப்பாடு வேறுவிதமாக உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட தொடர்ந்து வலியுறுத்துவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளநிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாஜக உறுதியாக இருக்கிறது.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர மத்திய அரசினை வலியுறுத்துவோம் என அதிமுக தெரிவித்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையில் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது பாரதிய ஜனதா.