துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி ஜூலை 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என்றும், மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 21 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பட்சத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.