தமிழகத்தில் தேர்தல் நாடகம் நடந்து முடிந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுகவின் வெற்றிக்காக மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட நாடகம், நகர்ப்புறத் தேர்தல் என்று விமர்சித்துள்ள அண்ணாமலை, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் முன் வருமா? என்றும் வினவியுள்ளார்.
சொல்லி வைத்தார் போல, மாநிலம் முழுவதும் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, ஆளும் கட்சியினர் பற்றிய குறைகளை யாரிடம் சொல்வது என்று கூட தெரியாமல் மாற்றுக் கட்சியினர் தடுமாறியதாகவும் கூறியுள்ளார்.