ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் தற்போது நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுடன் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக ஏற்கெனவே மனு அளித்தது. மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனுவும் அளித்திருந்தது.
இந்நிலையில் திமுக தொடர்ந்த இந்த தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு தற்போது நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அவசரகதியில் இந்த 3 தொகுதிகளுக்கும் இப்போது தேர்தல் நடத்த முடியாது என்றும் சரியான காலம் வரும்போது தான் தேர்தல் நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த மறுப்பு தெரிவித்து தற்போது இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுடன் சூலூர் தொகுதிக்கும் தேர்தல் நடத்த பரிசீலிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.