தமிழக தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்த நிலையில், 2 ஆயிரத்து 743 வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிப்பட்டன. 371 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். அதன் படி இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் 4 ஆயிரத்து 141 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்களும், காங்கேயத்தில் 50 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக பவானிசாகர், வால்பாறை தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொறிக்கும் பணிகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட உள்ளது.