தமிழகத்தில் 3 காவல் துறை உயரதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
மத்திய மண்டல ஐஜி ஹெச்.எம்.ஜெயராம் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தீபக் தமோர் நியமிக்கப்படுவதாக தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய உத்தரவில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு மண்டல ஐஜி தினகரன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அமல் ராய் அப்பதவியில் நியமிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கோவை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியிலிருந்து அருள் அரசு மாற்றப்பட்டு செல்வ நாகரத்தினம் நியமிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட ஜெயராம், தினகரன், அருள் அரசு மூவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் பணிகளில் எதிர்மறையான தகவல்கள் வந்ததன் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் பொறுப்பிலிருந்து ஜெ.லோகநாதன் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதில் ஏ.அருண் ஆணையராக நியமிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது