தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரை இரவு 7 மணியுடன் ஓய்ந்தது. முன்னதாக அரசியல் கட்சித் தலைவர்கள் சொந்த தொகுதியில் முகாமிட்டு தங்களது பரப்புரையை முடித்தனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதான கட்சிகளான அதிமுக, திமுக பரப்புரையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடிபிடித்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இன்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாம் போட்டியிடும் எடப்பாடி தொகுதியிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாம் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் இறுதிக் கட்ட பரப்புரை மேற்கொண்டனர்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் கோவில்பட்டியிலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியிலும் இறுதிக்கட்ட பரப்புரையை முடித்தனர்.