தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இன்று செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு கூறும் போது, “ தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்பு மனுக்களில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ 83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்களர்களாக 7, 192 திருநங்கைகள் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்களர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3.09 கோடி நபர்களும் பெண்கள் 3.19 கோடி நபர்களும் ஆவர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது வரை 8, 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ” என்றார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாள் வரை ஏழாயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நேற்றுமுன்தினம் பரிசீலனை செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட ஏழாயிரத்து 255 மனுக்களில் இரண்டாயிரத்து 727 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, நான்காயிரத்து 525 மனுக்கள் ஏற்கபட்டுள்ளன.
சில தொகுதிகளின் விவரங்கள் இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் ஆகும். வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்ற பின் இறுதி பட்டியல் மாலை வெளியிடப்பட உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர் என்பது அப்போது தெரியவரும்.