கல்வித்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன? சாதனை என்ன?

கல்வித்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன? சாதனை என்ன?
கல்வித்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன? சாதனை என்ன?
Published on

சுகாதாரத்துறையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடந்த பதிவில் பார்த்தோம். இப்போது கல்வித்துறையில் பாஜக அளித்த வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேறின? எனப் பார்ப்போம்.

பாஜக ஆட்சியில் கல்வித்துறையின் செலவு நாட்டின் மொத்த உற்பத்தியிலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கை 2017-18 படி பார்த்தால் பாஜக அரசின் கல்வித்துறைக்கான செலவு 2.6 சதவிகிதமாகவே உள்ளது. இது கடந்த 2012-13 ஆம் ஆண்டில் இருந்த செலவு 3.1 சதவிகிதத்தை விடவும் குறைவானது என்பதை தனியே விளக்க தேவையிராது.

அதேபோல, பாஜக அரசு கல்வி கற்கும் முறையை கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் திரைக்கு மாற்றபோவதாக கூறியிருந்தது. அப்படியென்றால் பள்ளிகூடங்கள் அனைத்தும் மின்சார வசதி பெற்றிருக்கவேண்டும். District Information system for Education தகவலின்படி 62% பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளது. மேலும் மின்சார வசதி உள்ள பள்ளிகளில் 24% பள்ளியில்தான் கணினி வசதி உள்ளது. இதனால் டிஜிட்டல் திரைக்கு கல்வியை மாறுவது அரசுக்கு மிகுந்த சவாலான ஒன்றாக உள்ளது.

அத்துடன் பாஜக ஆட்சியில் பெண் குழந்தைகள் பள்ளியில் படிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் கல்வியின் நிலைக்கான ஆய்வறிக்கை 2018(ASER) தகவலின்படி 64.4 சதவிகித பள்ளிகளில்தான் பெண்களுக்கான கழிப்பறை வசதியுள்ளது. இதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரும் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவே இருக்கிறது. 

அடுத்து படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது வேறு சில காரணங்களால் படிப்பை மேற்கொள்ள முடியாது போனவர்கள் அவர்களின் படிப்பை மீண்டு தொடர்வதற்காக தனி இணையதள படிப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கான portal கல்விமுறையை உருவாக்கப் போவதாக பாஜக கூறியிருந்தது. இதன்வழியே ஒரு மாணவர் பள்ளிக்குச் செல்லாமல் அல்லது கல்லூரிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே படிப்பினை மீண்டும் மேற்கொண்டு குறிப்பிட்ட படிப்பிற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும். இது முறையாக கல்விநிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவர்களின் படிப்பிற்கு ஒத்த கல்வி முறையாகும். 

ஆக, இதற்காக ‘ஸ்வயம்’(Swayam) என்ற portalஐ பாஜக அரசு தொடங்கியது. ஆனால், Associated Chambers of Commerce and Industry of India(ASSOCHAM) தரும் தகவலின்படி பெரும்பான்மையான மாணவர்கள் கல்விக் கற்று சான்றிதழ் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அவர்கள் முறையாக படித்திருந்தாலும் அவர்களின் வேலை திறன் என்பது வேலை செய்யும் அளவுக்கு இருப்பதில்லை என்கிறது ASSOCHAM.

அதாவது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பு முடிப்பவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே வேலை செய்வதற்கான அறிவுதிறன் கொண்டவர்களாகவும் வேலைவாய்ப்புக்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர் என்கிறது ASSOCHAM வெளியிட்டுள்ள தரவுகள். ஆக, கல்விக்கான முறையை உருவாக்கி தந்துள்ள அரசு, அவர்களை கல்வி ரீதியாகவும் திறமை ரீதியாகவும் வளர்த்தெடுக்க போதிய கவனம் செலுத்துவதில்லை என்றே மேற்கூறிய இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதிவுதவி அளிக்க வேண்டி Higher Education Financing Agency(HEFA)அமைப்பை பாஜக அரசு ஆரம்பித்தது. அதேபோல, மாணவர்கள் கல்விக்கடனை எளிதில் பெற ‘வித்யா லஷ்மி போர்டல்’ தளத்தை துவங்கியது. 

மேலும் தொலைக்காட்சியில் மாணவர்கள் படிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை பார்க்க ‘ஸ்வயம் பிரபா’(Swayam prabha)என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இவ்வாறு பல நல்ல முயற்சிகளை பாஜக அரசு எடுத்திருந்தாலும் அதன் முழுப் பயன் இன்னும் கல்வித்துறைக்குள் பிரதிபலிக்கவில்லை என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

சரி, சுற்றுச்சுழலில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

(வெயிட் அண்ட் சி..)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com