ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், 3 வாரங்களுக்குள் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு நீதிபதி ரோகிண்டன் நரிமன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், மாநில அரசின் உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு கிடையாது என்று வாதிட்டார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், மாசு ஏற்படுத்தியது 100 சதவிகிதம் உண்மை என்றும், முறையாக ஆய்வு செய்யாமல் ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாக பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை அளித்ததாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான ஆரியமா சுந்தரம், அடிப்படை ஆதாரமின்றி , சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி ஆலையை அரசு மூடியது தவறு என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பசுமைத் தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். அதேபோல், ஆலையை திறக்காமல் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கும் தடை விதித்தனர்.
ஆலையில் உடனே பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். அனைத்து தரப்பினரும் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் கூறுகையில், ஆலையை திறக்க நீதிமன்றம் நேரடியாக உத்தரவிடவில்லை எனவும் மக்கள் நலனுக்காகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை முடிவு எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து மு.க ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கொள்கை முடிவு மூலமாகவே தீர்வு காண முடியும் எனவும் ஆனால் தமிழக அரசு இதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் கொள்கை முடிவு தொடர்பாக அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல என தெரிவித்தார்.
மேலும், தீர்ப்பின் முழு விவரம் கிடைக்கவில்லை எனவும் கிடைத்தவுடன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.