ஆட்சி நீடிக்காது என எண்ணியவர்கள் வியப்படையும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்பகுதியில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்த பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர், எடப்பாடி பகுதிக்கு உட்பட்ட எல்லாப் பகுதிகளிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். நங்கவள்ளி பகுதியில் அடுத்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும் எனத் தெரிவித்த முதலமைச்சர், தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறினார். எம்.எல்.ஏ ஆறுக்குட்டி சுயவிருப்பத்தின் பேரிலேயே தங்கள் அணியில் இணைந்ததாகவும், பன்னீர்செல்வம் அணியில் உள்ள எந்த எம்.எல்.ஏக்களுடனும் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்தார்.