இரட்டை இலைச்சின்னம் தொடர்பான வழக்கில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாரபூர்மான முறையில் சின்னத்தை பெறும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் பழனிசாமி அணி ஈடுபட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. பொதுக்குழு தீர்மானங்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யக்கூடிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 63 பக்கங்கள் கொண்ட தீர்மானங்களை சட்ட வல்லுனர்களின் உதவியுடன் மொழிமாற்றம் செய்யக்கூடிய பணி நடைபெற்று வருகிறது. அதிமுகவின் சட்டவிதிகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே உள்ள விதிகள், அதில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவையும் சட்ட வல்லுனர்களோடு கலந்தாலோசித்து மொழிமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு தேர்தல் ஆணையத்தை அடுத்த வாரம் அணுக இருக்கிறார்கள். சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு மற்றும் இரட்டை இலை தொடர்பான வழக்கு தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, பதில் பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள். கட்சியின் சட்டவிதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், கட்சி விதிகள், அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தாக்கல் செய்து, அணிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு இணைந்துவிட்டதால் வழக்கை முடித்து வைத்து சின்னத்தை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோருவதற்கு முதலமைச்சர் தலைமையிலான அணியினர் திட்டமிட்டுள்ளனர்.