மக்களவையில் முத்தலாக் தடைச் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது அதிமுக எம்.பியான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான ஈபிஎஸ், ஓபிஎஸ் மகன் நடவடிக்கை மீது அதிருப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் வகையில் கடந்த 25-ம் தேதி மக்களவையில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் மசோதாவை நிறைவேற்றும் வகையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இறுதியில் வாக்கெடுப்பில் 302 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 78 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால், மசோதா நிறைவேறியது.
மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆதரவே தெரிவித்திருந்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் ரவீந்திநாத் குமார் முத்தலாக் தடைச் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் அதிமுக எதிர்ப்பு நிலையையே கடைபிடித்து வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் தற்போது இருக்கும் 11 எம்.பிக்களும், இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கட்சியின் மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாக தெரிகிறது. ராஜ்ய சபாவில் அதிமுக எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படியிருக்க ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆதரவு தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ள ரவீந்திரநாத் குமார், “நாட்டில் உள்ள பெண்களின் உரிமைகளுக்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். முத்தலாக் மசோதா விவகாரத்தில் மக்களவையில் என் கருத்தைதான் தெரிவித்தேன்” எனக் கூறியிருக்கிறார். இதனால் கட்சியின் நிலைப்பாட்டை மீறி ரவீந்திரநாத் குமார் செயல்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ரவீந்திரநாத் குமார் நடவடிக்கை மீது முதலமைச்சர் பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.