ராஜினாமா செய்த ஆசிரியரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டுமென ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா. அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைக்கூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே” என பதிவிட்டுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியையான சபரிமாலாவும் தனது 7 வயது மகனுடன் போராடி வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சபரிமாலா தனது அரசுப்பணியை ராஜினாமா செய்தார்.