முதல்வரின் கூற்றுப்படி எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டையா? அந்த கோட்டையை கைப்பற்றும் வாய்ப்பு எதிர்கட்சிகளுக்கு இருக்கிறதா? எடப்பாடி தொகுதி மக்கள் மனநிலை என்ன? எதிர்பார்ப்புகள் என்ன? - ஒரு பார்வை...
"எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 1977 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை திமுக வெற்றி பெற முடியாத தொகுதி. திமுகவின் அனைத்துத் தலைவர்களும் பிரசாரம் செய்தாலும் இங்கே அவர்களால் வெற்றி பெற முடியாது..." - இப்படி கூறியவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் இந்த தொகுதியில் இருந்துதான் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கும் அளவிற்கு, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகள் அதிமுக வசமே உள்ளன. அவற்றில் ஒரு தொகுதிதான் எடப்பாடி. முதல்வர் பழனிச்சாமியின் சொந்த தொகுதி என்பதாலும், அவரது பெயருடன் எடப்பாடி என்ற அடைமொழி சேர்த்து அழைக்கப்படுவதாலும் எடப்பாடி தொகுதி தமிழகத்தில் வெகு பிரபலம்.
எடப்பாடி தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், பாமக 3 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 6 முறை போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்றிருக்கிறார். 1996 மற்றும் 2006 சட்டப்பேரவை தேர்தல்களில் பாமக வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டார். சரி, இப்போது தொகுதிக்குள் வலம் வரலாம்.
எடப்பாடி தொகுதியில் துண்டு, கைத்தறி, ஜவுளி ஏற்றுமதி தொழில் மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேட்டூரில் இருந்து பவானி செல்லும் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தொகுதி என்பதால் வயல்கள், தோப்புகள், நீர்நிலைகளால் எப்போதும் பசுமையாக காணப்படுகிறது. எடப்பாடி தொகுதியை பொறுத்தமட்டில் வன்னியர் சமூகத்தினர் அதிகளவு உள்ளனர். இத்தொகுதியில் அதிமுகவிற்கான வாக்கு வங்கி வலுவாகவே இருந்து வருகிறது என்பது கள நிலவரத்தில் நாம் கண்ட காட்சி. இந்தத் தொகுதியில் நம்மிடம் பகிரப்பட்ட மக்கள் வாய்ஸ்...
> "எங்க ஒட்டு எப்போதும் அம்மாவுக்கு (ஜெயலலிதா) தான். அம்மா இப்போ இல்ல, அதனால இப்போ இருக்கிறவங்களுக்கு தான் என்னோட ஓட்டு. சின்னத்தை பார்த்துதான் ஓட்டு போடுவோம். ஆளைப் பார்த்து ஓட்டு போடமாட்டோம்."
> "நான் ஓட்டு போட்ட 3 தேர்தல்ல இந்த தொகுதியில இப்போ இருக்கிறவங்க நல்லா பண்ணிட்டு இருக்காங்க."
> "உதயசூரியன் வந்தா நல்லாயிருக்கும். அவங்க ஆட்சியில சிலிண்டர் விலை கம்மியா இருந்தது. இப்போ ஆயிரம் ரூபாய் ஆகுது."
நெசவுத்தொழிலின் கேந்திரமாக கருதப்படும் எடப்பாடி தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதானமாக இடம்பெற்றிருந்த இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேறப்படவில்லை என்பது நெசவாளர்களின் கருத்தாக உள்ளது. மேலும் ஜி.எஸ்.டி. வரியால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதால் கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.2,000 உதவித் தொகை இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனர் நெசவு தொழிலாளர்கள்.
கோரிக்கைகள்:
> ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும்
> மாம்பழ கூழ் அரைக்கும் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும்.
> தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
> காவிரி கரையோரம் உள்ள சுற்றுலாத்தலமான பூலாம்பட்டியில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க வேண்டும்.
> பூலாம்பட்டி – ஈரோடு நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்கப்பட வேண்டும்.
நிறைவேறியவை:
> 100 ஏரிகளில் காவிரி உபரிநீர் நிரப்பும் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.
> நங்கவள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, விடுதி கட்டித்தரப்பட்டுள்ளது.
> எடப்பாடியில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
> ரூ.5 கோடி மதிப்பீட்டில் எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.
> எடப்பாடியில் வட்டச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
> எடப்பாடி – பெங்களூருக்கு இடையே நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.