மணிப்பூர் தேர்தலில் காலை 11.30 மணி நிலவரப்படி 27.3 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
60 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அம்மாநில ஆளுநர் இல.கணேசன் இம்பாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். 38 தொகுதிகளுக்கு நடக்கும் முதற்கட்டத் தேர்தலில் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்வர் பைரன் சிங், சபாநாயகர் கேம்சந்த் சிங், துணை முதல்வர் யம்நம் ஜாய்குமார் சிங் மற்றும் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் லோகேஷ் சிங் ஆகியோரின் விதியும் இன்றைய தேர்தலில் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடந்து முடிந்ததும், மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.