சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதை நான் எதிர்க்கவில்லை எனவும் பற்றாக்குறையாக கிடைக்கும் நீரை, சென்னைக்கு கொண்டு சென்றால் மக்கள் போராடுவார்கள் என்றே கூறினேன் எனவும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாக செய்திகள் வெளியானது. இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதை நான் எதிர்க்கவில்லை எனவும் பற்றாக்குறையாக கிடைக்கும் நீரை, சென்னைக்கு கொண்டு சென்றால் மக்கள் போராடுவார்கள் என்றே கூறினேன் எனவும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து சென்றால் அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் அதனால் வேறு எங்கேயாவது தண்ணீர் எடுக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆராய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2 நாள்கள் வழங்கப்படும் காவிரி நீரை சென்னைக்கு கொண்டு சென்றால் மக்கள் போராடுவார்கள் என்றே கூறினேன். தவறான பிரசாரத்தை துவக்கி, அதன் மூலம் தனக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் தான் கூறியதை ஊடகங்கள் திரித்து கூறியிருப்பதாகவும் அதற்கு கண்டனத்தையும் துரைமுருகன் பதிவு செய்துள்ளார்.