கலப்படப் பால் பிரச்னையால் கொலை மிரட்டல் வருகிறது: ராஜேந்திர பாலாஜி

கலப்படப் பால் பிரச்னையால் கொலை மிரட்டல் வருகிறது: ராஜேந்திர பாலாஜி
கலப்படப் பால் பிரச்னையால் கொலை மிரட்டல் வருகிறது: ராஜேந்திர பாலாஜி
Published on

கலப்படப் பால் பிரச்னையில் தீவிரமாக செயல்படுவதால் தினமும் இரவில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், இதற்கெல்லாம் பயந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

கலப்படப் பால் பிரச்னை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “நெஸ்லே, எவரிடே, ரிலையன்ஸ் பால் பவுடர்கள் உலகத் தரம் வாய்ந்தது என்று விளம்பரம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த பால் பவுடர்களில் காஸ்டிக் சோடாவும், பிளீச்சிங் பவுடரும் கலந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இவற்றை ஆய்வு செய்த ஆய்வகம், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அமிலம் அதிகமாகி கெட்டுப் போன பாலை அமிலத்தன்மையைக் குறைப்பதற்காக காஸ்டிக் சோடாவை சேர்கின்றனர். இதுபோன்ற பால் பவுடரை வெந்நீரில் கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காலரா போன்ற வியாதிகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதே ஆய்வு நிறுவனம், ஆவின் பால், தயிர், பால் பவுடர் ஆகியவற்றை சோதனை செய்ததில், அவை அனைத்தும் மிகவும் தரமானவை என்று அறிக்கை வந்துள்ளது.

மாதவரத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் ஆய்வு செய்து இந்தத் தகவலை முன்பே சொன்னேன். ஆனால் இந்த தனியார் நிறுவனங்கள் மறுத்தன. இப்போது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகம் இதை உறுதிப் படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்போது, சட்டத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது. நான் ஒரு பால்வளத்துறை அமைச்சராக மக்களை எச்சரிக்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட பாலை குழந்தைகள் அருந்தும்போது, குழந்தைகளின் நுரையீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கும். ஆனால் ஆவின் பால் தரமானது என்று நிரூபணமாகியுள்ளது. அதனால்தான் அன்றே சொன்னேன், “ஆவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரானது” என்று. இந்த கலப்படப் பால் விவகாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துச் சென்றுள்ளோம். விரைவில் அவர் நடவடிக்கை எடுப்பார். இதுபோன்ற நிறுவனங்களை தடை செய்வது குறித்தும் முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். மக்கள் வாங்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். இந்த நிறுவனங்களைத் தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இருந்தால் இந்த நிமிடமே உடனடியாக தடை செய்து விடுவேன். முதலமைச்சர் உத்தரவின் பேரில்தான் நான் இந்தப் பிரச்னையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆவின் பால் விற்பனை இப்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 200 இடங்களில் புதிதாக ஆவின் பால் விற்பனை மையங்கள் நிறுவ உள்ளோம். தனியார் பால் நிறுவனங்களில் கலப்படம் இல்லை என்று சிலர் கூலி வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

மேலும், “நான் நேர்மையானவன் என்பதாலும், கலப்படப் பால் பிரச்னையில் தீவிரமாக இருப்பதாலும் தினமும் இரவில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருகிறது. இதற்கெல்லாம் பயந்து பின்வாங்கப் போவதில்லை” என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com