இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர முயன்ற விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் நடைபெற்றுள்ள ஊழல், மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலை விட மோசமானதாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக் கொள்கைகள் எல்லாம் குதிரை பேர அரசால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முறைகேடான தேர்வு மூலம் வேறு மாநிலத்தவரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிமுக அரசு துணை போயிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்க காரணமாக இருந்தோர், தேர்வுக் கமிட்டிக்கு நிர்பந்தம் கொடுத்தோர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.