மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி, தொழிலதிபர்கள் முதல் கூலித்தொழிலாளி வரை கலவையாக உள்ள தொகுதி. திமுகவில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியில் சேர்ந்த 3 மணிநேரத்தில் இத்தொகுதியை டாக்டர் சரவணனுக்கு ஒதுக்கியது பாரதிய ஜனதா கட்சி. இத்தொகுதி நிலவரம் இதுதான்...
2011-இல் மதுரை வடக்கு தொகுதி தனியாக பிரிக்கப்பட்டு முதல் தேர்தலை சந்தித்தது. மதுரை மாநகராட்சியின் 16 வார்டுகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் சந்தித்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் டாக்டர் சரவணன், திமுக சார்பில் கோ.தளபதி, அமமுக சார்பில் ஜெயபால், நாம் தமிழர் சார்பில் அன்பரசி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அழகர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
வரும் தேர்தலில் இத்தொகுதி, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் பாஜக மாநிலப் பொதுச்செயலராக உள்ள பேராசிரியர் சீனிவாசனுக்கு சீட் தரப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. திமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதையடுத்து, அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. மதுரை வடக்கு தொகுதியில் மருத்துவ சேவை, ஆதரவற்றோருக்கு கல்வி, திருமண உதவிகளை செய்ததன் மூலம் தொகுதி மக்களிடம் அறிமுகமான நபராக அவர் பார்க்கப்படுகிறார்.
திமுக சார்பில், கோ.தளபதி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 1996-ஆம் ஆண்டு சேடப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். பின்னர், 2011, 2016 தேர்தல்களில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவிடம் தோல்வியை தழுவியவர். இந்தமுறை மேற்கு தொகுதியில் போட்டியிடாமல், தொகுதி மாறி மதுரை வடக்கில் களமிறங்கியுள்ளார்.
அமமுக வேட்பாளர் ஜெயபால், கடந்த தேர்தலில், அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். மதுரை மாநகர் வடக்கு மாவட்டச்செயலாளராக உள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்பரசி, முதன்முறையாக தேர்தல் களம் காண்கிறார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அழகர், கமல் நற்பணி மன்றத்தில் 30 ஆண்டுகளாக மதுரை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். தற்போது மதுரை மண்டல செயலாளராக இருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மதுரை வடக்குத்தொகுதியாக உருவான பின்னர், அதிமுக வசமே இருந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்குமான நேரடி போட்டியாக மாறியுள்ளது.