பெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் பாலி சிஸ்டிக் ஓவரி.. தீர்வு என்ன? டாக்டர் விளக்கம்

பெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் பாலி சிஸ்டிக் ஓவரி.. தீர்வு என்ன? டாக்டர் விளக்கம்
பெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் பாலி சிஸ்டிக் ஓவரி.. தீர்வு என்ன? டாக்டர் விளக்கம்
Published on

பெண் மலட்டுத் தன்மையை உருவாக்கும் PCOD எனும் பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாடு குறித்து விவரிக்கிறார், அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

‘’இன்றைக்கு பெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் பிரச்னைகளுள் முதலாக நிற்பது இந்த பிசிஓடி (PCOD)தான்.

பெண்களுக்கு ஆண்கள்போல மீசை தாடி முளைக்கும். ஆண்கள் போலவே பீரியட்ஸ் வராது. அல்லது கோளாறாகி பிரதி மாதம் வராது. ஆண்கள் போலவே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் PCOD என்பது ‘பெண் ஆணாகும் தன்மை’.

தற்போதைய காலங்களில் வளரிளம் பெண்களிடையே PCOD மிகவும் அதிகரித்து வருகிறது. கீழ்க்காணும் முக்கிய அறிகுறிகள் மூலம் PCOD இருப்பதை அறிந்திட முடியும்

  1. மாதவிடாய் கோளாறுகள்
  2. தேவையற்ற இடங்களில் முடி முளைத்தல்
  3. முகப்பரு தோன்றுதல்
  4. உடல் பருமனாகுதல்

இன்னும் ஒரு அறிகுறி இருக்கிறது. கழுத்துப்பகுதியின் பின்புறம், கக்கம் போன்ற பகுதிகளில் கருநிறத்தில் தோலில் கோடுகள் போன்று தோன்றும். இதை Acanthosis Nigricans என்று கூறுவோம். இது இன்சுலின் எதிர்ப்பு நிலையின் வெளிப்பாடாகும்.

PCOD இல் ஒரு பெண்ணின் உடல் எப்படி மாற்றம் அடைகிறது என்று பார்ப்போம்.

ஒரு பெண்ணின் சினைப்பையில் இருந்து அதிக அளவில் பெண்மையின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும் (Estrogen) சிறிய அளவில்
ஆண்மையின் ஹார்மோனான ஆண்ட்ரோஜெனும் ( Androgen) சுரக்கும்.

ஆனால் நார்மலாக இருக்கும் பெண்களில், அவளது ஓவரிகள் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோனை இன்ஹிபின் (inhibin) எனும் பொருளால் மழுங்கடித்துக்கொண்டே இருக்கும். அதனால் நார்மல் பெண்களில் இந்த இன்ஹிபின் நன்றாக வேலை செய்யும்.

PCOD இருக்கும் பெண்களில் அந்த இன்ஹிபின் சரியாக வேலை செய்யாது. அதற்கு பதிலாக ஏக்டிவின் (activin) எனும் பொருள் சுரந்து ஆண்மைக்கான ஹார்மோனை வீரயமிக்கதாக்கும். மேலும், PCODஇல் இன்சுலின் வேலை செய்யாமல் போவதால் பெரும்பாலும் 90% பெண்கள் உடல் பருமனுடன் இருப்பார்கள்.

உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு தோலுக்கு கீழ் அனைத்து இடங்களிலும் கொழுப்பு படிந்திருக்கும். இந்த கொழுப்பை adipose tissue என்போம். உடலானது இந்த adipose tissue களில் , ஆண்ட்ரோஸ்டெனிடயோன் (Androstenidione) எனும் ஹார்மோனை தொடர்ந்து ஈஸ்ட்ரோனாக(estrone) மாற்றிக்கொண்டே இருக்கும்.

இன்சுலின் வேலை செய்யாமல் இருப்பதால், கல்லீரல் இந்த ஹார்மோன்கள் இயங்கத் தேவையான புரதமான sex hormone binding globulin(SHBG) ஐ குறைவாக சுரக்கும்.

அதனால், அவளது ஓவரிகள் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் (free testosterone)
மற்றும் அவளது கொழுப்பில் இருந்து வரும் ஈஸ்ட்ர டயால் (free estradiol) முதலிய ஹார்மோன்கள் ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றிக்கொண்டிருக்கும்.

இந்த அதிகமான டெஸ்டோஸ்டிரோன் தான், PCOD உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போல மீசை, தாடி, அக்குள் பகுதிகளில் முடிகள் வளர காரணம். இந்த நிலை முற்றினால் தலை சொட்டை (androgenic alopecia) விழவும் வாய்ப்பு இருக்கிறது. ஆண்களுக்கு சொட்டை விழக் காரணமும் இந்த டெஸ்டோஸ்டிரான் தான்.

இப்படி பெண் ஹார்மோன் ரத்தத்தில் அதிகமாக இருப்பதால், பெண்ணின் மூளையில் உள்ள ஹைபோதலாமஸில் gonadotrophic releasing hormone(GnRH) அளவுகளை தாறுமாறாக கூட்டியும் குறைத்தும் சுரக்கும் .

GnRH அளவுகள் நிலையாக இல்லாமையால், அதன் விளைவாக பிட்சூயடரி சுரப்பியில் இருந்து Follicular stimulating hormone(FSH) அளவுகளை குறைவாக சுரக்க ஆரம்பித்து விடும். FSH இருந்தால் தானே, பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டைகள் வளர்ச்சி காண முடியும். FSH குறைவதால், கருமுட்டைகள் சரியாக வளர்ச்சி அடையாமல், பாதி வளர்ந்த நிலையலேயே பல முட்டைகள் சினைப்பையில் காணப்படும்.

FSH குறைந்ததை ஈடுகட்ட, அவளது மூளை, leutinising hormone(LH) ஐ அதிகமாக சுரக்கும். இந்த லூடினைசிங் ஹார்மோன் சரியாக முட்டை வெளியேற்றத்துக்கு மட்டுமே தேவை. இந்த LH , தேவைக்கு மீறி அதிகமாக இருப்பதாலும், முட்டைகள் சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பதாலும்,
மாதவிடாயின் மத்தியில் நிகழ வேண்டிய சினைப்பையில் இருந்து முட்டை வெளியேற்றம் தடைபட்டு விடும்.

முட்டை சரியாக வெளியேற இன்சுலினும் சரியாக வேளை செய்ய வேண்டும். அதுவும் பாதிக்கப்படுவதால், முட்டை வெளியேற்றம் முற்றிலும் நின்று விடுகிறது. (Anovulatory cycles)

LHஆனது தான் செய்ய வேண்டிய வேலை "முட்டையை வெளியேற்றுதல்" அதை செய்ய முடியாமல், சினைப்பையில் உள்ள THECA CELLS ஐ நன்றாக வளர்த்துவிடும். இந்த THECA செல்கள் , இன்னும் அதிகமான ஆண்மை ஹார்மோன்களை சுரக்கும்.

இது மேலும் பிரச்சனையை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைகளால்தான் PCOD பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியாக மாதவிடாய் வராமல் இருப்பதற்கு காரணம் தெரிந்துவிட்டதா??

மாதவிடாய் சுழற்சியில், முட்டையே வெளியேறாமல் எப்படி கரு உருவாக முடியும்? அதனால் தான்.. PCOD பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கின்றனர்.

இந்த பிரச்சனை அனைத்திற்கும் மூலக் காரணம், ‘இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்’. அதை சரி செய்தால், இந்த ஹார்மோன் குளறுபடிகள் அனைத்தும் படிப்படியாக சீராகிவிடும். உடல் பருமன் உள்ள பெண்களுக்கு, அவர்களது உடல் எடையை சரி செய்தால், இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் முழுமையாக குணமாகிவிடும்.

பெண்களில் உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் PCOD வருகிறது. இதை LEAN PCOD என்போம். இந்த LEAN PCOD மக்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டெண்சை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

100க்கு 90க்கும் அதிகமான PCOD பெண்கள் எடை அதிகமானவர்களாகவே (obese PCOD) இருக்கின்றனர். 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே எடை சரியாக உள்ள பெண்களுக்கு lean PCOD வருகிறது.

முதலில் எடை அதிகமாக உள்ள PCOD பெண்களுக்கான டயட். இவர்கள் PCOD பிரச்சனைக்கு முழு முதல் தீர்வு - அவர்களது உயரத்துக்கு ஏற்ற எடைக்கு இறங்கச் செய்வதே தலையாய சிகிச்சை முறை.

க்ளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) குறைவான காய்கறிகளையும், நல்ல கொழுப்புகளை உள்ளடக்கிய உணவுகளையும் உட்கொள்வதால் இன்சுலின் சுரப்பு குறைந்துவிடுகிறது.

அதனுடன் தேகப்பயிற்சியையும் மேற்கொள்ளும்போது,  உடல் எடை மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கிறது. எடை குறைய குறைய இன்சுலின் சொல் பேச்சு கேட்க ஆரம்பிக்கும். இன்சுலின் நன்றாக வேலை செய்வதால், சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேருவதில் பிரச்சனை இருக்காது.

உடம்பு ஃபேட் பர்னிங் மோடிற்கு மாறிவிட்டதால், adipose tissue எனும் ஊளைச் சதை சேராது. உள்ளுறுப்புகளில் சேர்ந்த கொழுப்பும் கரைக்கப்படும். ஆகவே தேவையில்லாமல் ஈஸ்ட்ரோன் உருவாகாது.

இவை போக, PCOD உள்ள பெண்களுக்கு மெட்ஃபார்மின்(metformin) மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது, இன்சுலினை வேலை செய்ய வைப்பதற்குத் தான். நீரிழிவு இருப்போருக்கும் இன்சுலினை வேலை செய்ய வைக்கவே மெட்ஃபார்மின் பயன்படுகிறது.

இரண்டு நோய்க்குமே காரணம் ஒன்றானதால், தீர்வும் ஒன்றாகி விட்டது.

உடல் எடை குறைத்தல், இன்சுலின் அளவுகளை ரத்தத்தில் கட்டுக்குள் வைத்தல், ரத்தத்தில் இருக்கும் இன்சுலினை சரியாக வேலை செய்ய வைத்தல் ஆகியவைதான் இந்த இரு நோய்களையும் தீர்க்கும் தாரக மந்திரங்கள்.

எடை அதிகமாக இருக்கும் பெண்கள் எடை குறையுமட்டும்/ குழந்தைப்பேறு அடையுமட்டும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

அதிக மாவுச்சத்துள்ளதும் இன்ஃப்லமேஷனை உருவாக்க வல்ல தானிய வகைகளை உடல் எடை குறையும் தருணத்தில் தவிர்த்து விடுதல் நல்லது. பால் பருகுவதை தவிர்த்தல் நலம்.

ஜங்க் ஃபுட்ஸ், குளிர் பானங்கள் , எண்ணெயில் தீக்குளித்த உணவுகள் கட்டாயம் சாப்பிடக்கூடாது. தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும். மோனோ அன்சேச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள் (கறி, முட்டை) , ஒமேகா 3 கொழுப்பு அதிகம் ( மீன்கள்) உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் (nuts) போன்றவற்றை அதிகம் உண்ணவேண்டும்.

LEAN PCOD மக்களுக்கு அவர்கள் தங்களது எடையை மெய்ன்டெய்ன் செய்ய தேவைக்கேற்ற மாவுச்சத்தை கஞ்சி வடிகட்டப்பட்ட சாதம், பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகமாக உண்டு பெற வேண்டும். நல்ல உடற்பயிற்சி தேவை

 மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளும் எடுக்க வேண்டும். (எடை குறைவாக LEAN PCOD இருப்பவர்களுக்கு மெட்பார்மின் மாத்திரை குண்டாக இருப்பவர்களை விட நன்கு வேளை செய்யும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே சிகிச்சையில் மாத்திரையின் பங்கு மிக முக்கியமானது).

இரு தரப்பினருக்குமே தினசரி விட்டமின் டி அளவுகள் சரியாக கிடைக்க வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு. விட்டமின் டி 3 க்கு எங்கும் அலைய வேண்டியதில்லை தினமும் மொட்டை மாடியில் சூரிய வெயிலில் 15 நிமிடம் நின்று பெற்று விடலாம்.

PCOD என்பது மிக எளிதாக சரிசெய்யக்கூடிய பெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் நோயாகும். தேவை நல்ல உணவு முறையும் சரியான சிகிச்சையும் தான். குறை மாவு உணவு முறை மற்றும் உடற்பயிற்ச்சியுடன் கூடிய வாழ்வியல் பிசிஓடிக்கான தீர்வை வழங்கவல்லது’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com