நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் உறவினரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். இவர், அப்பகுதியில் மருத்துவமனை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவ சேவையை தவிர்த்து துணிக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், திமுக மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி அரசு மருத்துவராக பணியாற்றும் தனது மனைவி சீதாவை காரில் வீட்டிற்கு அழைத்து வரும்போது, வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிவராம பெருமாளின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். உடனே காரில் இருந்து இறங்கிச் சென்ற டாக்டர் சிவராம பெருமாள், அரசு மருத்துவமனையில் கோவிட் பணி முடிந்து டாக்டரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் கூறி உள்ளார்.
அப்போது ஆங்கிலத்தில் தான் பேசுவாயா?. தமிழில் பேச மாட்டாயா? என டி.எஸ்.பி. பாஸ்கரன் ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் டி.எஸ்.பி. பாஸ்கரன் டாக்டர் சிவராம பெருமாளையும் அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. பொது இடத்தில் பலர் முன்னிலையில் தன்னையும் தனது மனைவியையும் அவமானமாக பேசியதால் சிவராம பெருமாள் துயரத்தோடு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஏற்கெனவே சிவராம பெருமாளுக்கும் அவரது உறவினரும் வழக்கறிஞருமான விஜய் ஆனந்த் என்பவருக்கும் முன்பகை இருந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு டி.எஸ்.பி. பாஸ்கரன், சிவராம பெருமாளை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவராம பெருமாள் மனசோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் தன்னை மிரட்டிய துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் விஜய் ஆனந்த் இருவரும் தான், தனது மரணத்துக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிவராம பெருமாள் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை ஆதாரமாக கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவராம பெருமாள் தற்கொலை செய்வதற்கு முன் அவரது உறவினரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060