தங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போலத்தான் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முயற்சித்து வருகிறேன். விரைவில் நல்ல செய்தி வரும். இணைப்பு நாளைக்கு கூட சாத்தியமாகலாம். சகோதரர்களுக்குள் சிறு பிணக்கு மட்டுமே உள்ளது. ஜெயக்குமார் மீனவர் பிரிவு செயலாளர்தான், அவரை சசிகலாதான் நியமித்தார். நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய விஷயம். உறவினர்கள் என்ற முறையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். காலம் வரும் போது அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில் சொல்வேன். விரைவில் அமைச்சர்கள் அச்சம் விலகி இணைவார்கள் என நம்புகிறேன்.
அணிகள் இணைந்தால் கூட என்னுடைய தலைமையில்தான் கட்சி செயல்படும். தமிழக மக்கள் நலன் கருதி ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்ததில் தவறில்லை. எங்கள் இயக்கம் ஒன்றுபடும். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய வேட்பாளர் வெற்றி பெறுவார். அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காது. பொறுப்பான பதவியிலுள்ள நான் பொறுப்பற்ற முறையில் நடக்கமாட்டேன், ஆனால் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றார். அணிகள் இணைப்பு அக்.17ஆம் தேதிக்குள் கூட இருக்கலாம். எங்களை ஒதுக்கி வைக்க விரும்பியவர்களைப் பார்த்தால் அரசனை நம்பி புருஷனை கைவிட்டுவிட்ட கதை என்ற பழமொழியைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்றார்.
இந்த ஆட்சி நான்கு ஆண்டுகாலம் நீடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், "ஜெயலலிதா பாதையில் சென்றால் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் நீடிக்கும்" எனக் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்காக கட்சியை வலிமைப்படுத்த தான் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார்.