மறியல் போராட்டத்தின் போது 2 மணி நேரம் தாமதமாக ரயில் வந்ததால் திமுகவினர் ஓய்வெடுத்து போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுகவின் பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏராளமான திமுகவினர் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் ரயில்களை மறித்து போராட்டங்கள் நடைபெற்றதால், கோவைக்கு ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.
வடகோவை ரயில் நிலையத்திற்கு எந்த ரயில்களும் வரவில்லை. அப்போது போராட்டக்காரர்களிடம் பேசிய போலீஸார், ஒரு மணி நேரம் கழித்துதான் ரயில் வரும் என தெரிவித்தனர். இதனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்த மரங்களின் அடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் நேரத்தை கழித்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் ஒன்று வந்துள்ளது. அதை வேகமாக மறிக்க சென்ற திமுகவினர், அது சரக்கு ரயில் என்று தெரிந்தது மறிக்காமல் திரும்பியுள்ளனர். போலீஸார் விளக்கம் கேட்ட போது சரக்கு ரயிலை மறிக்க மாட்டோம், பயணிகள் ரயிலைதான் மறிப்போம் என்று கூறியுள்ளனர். பின்னர் மேலும் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு பயணிகள் ரயில் வந்துள்ளது.
உடனே அந்த ரயிலை மறித்த திமுகவினர், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி போராடினர். சிறிது நேரத்திற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.