மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் ஒப்புதல் பெறும்வரை தமிழக அரசு அலட்சியமாக இருந்தது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது அணைக் கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் ஒப்புதல் பெறும்வரை தமிழக அரசு அலட்சியமாக இருந்தது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தை வஞ்சிப்பதற்காகவே காவிரி குறுக்கே புதிய அணைக் கட்ட மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.