வாரிசுகள் என்ற காரணத்திற்காக மட்டும் தகுதி வாய்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் இருக்கமுடியுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் வடசென்னை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், தேர்தல் நடத்தாமல், வாக்குகள் எண்ணப்படாமல் திமுகவின் வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக விமர்சனம் செய்த ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடைவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதிபட தெரிவித்தார். வாரிசு அரசியல் குறித்து பலரும் விமர்சனம் செய்வதாக குறிப்பிட்ட அவர், திமுக நிறுத்தும் வேட்பாளர் தகுதியானவரா என்பதை ஆராய வேண்டும் என்றும், ரத்தப் பரிசோதனை செய்யும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் கூறினார்.
மேலும் வாரிசு அரசியல் குறித்து, “வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கலாமா என்று சிலர் கேட்கலாம். வாரிசுகள் என்பதற்காக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியுமா?. திமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் தகுதி வாய்ந்தவர்கள் இல்லையா?. வேட்பாளர்களின் தகுதி குறித்து விமர்சியுங்கள், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம்
ஜெயலலிதா முதல்வராக இருந்து மறைந்திருக்கிறார், இறப்பில் மர்மம் இருக்கிறது. திமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்து ரீதியில் ஜெயலலிதா அரசியல் எதிரியாக கூட இருக்கலாம். ஆனால் இறந்தது பதவியில் இருந்த ஒரு முதலமைச்சர். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் இருப்பவர்களுக்கு நான் தண்டனை வாங்கி கொடுப்பேன்” என்று ஸ்டாலின் பேசினார்.