திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார்.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாம் அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சில தினங்களுக்கு முன்பு சந்தித்த சந்திர சேகர் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
தனி விமானம் மூலம் நேற்று ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது, திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை சந்திரசேகர் ராவுக்கு ஸ்டாலின் பரிசாக அளித்தார். காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு ஆதரவளிக்குமாறு சந்திரசேகர் ராவிடம் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினை, சந்திரசேகர் ராவ் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்திருந்தார். மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரசேகர் ராவ், ஸ்டாலினை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த சந்திரசேகர் ராவ், அடுத்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் அடுத்ததாக சந்திக்கவுள்ளார்.
ராகுலை பிரதமராக அறிவித்த ஸ்டாலின், சந்திரசேகர் ராவை சந்திப்பது குழி பறிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ‘அரசியலில் ஸ்டாலினுக்கு என்று தனி கொள்கைகள் கிடையாது. அரசியல் நாடகம் ஆடுகிறார். நான்காவது அணி, ஐந்தாவது அணி அமைத்தாலும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்’ என்றும் அவர் தெரிவித்தார்.