நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக சார்பில் வரும் 27 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 27 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனித சங்கிலிப் போராட்டத்தை அறவழியில் அமைதியான முறையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை நசுக்கும் வகையில் குண்டர் சட்டத்தை ஏவுவதை உடனடியாக நிறுத்தி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள் மற்றும் பேராசிரியர் ஜெயராமன், சேலம் மாணவி வளர்மதி, மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.