தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காலி பெருங்காய டப்பா என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் தமிழக வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூர் பகுதியில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
அப்போது குன்னத்தூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களிடையே பேசிய போது...
வாக்கு சேகரிக்க வரும் மாற்றுக்கட்சியினர் தங்கள் வாரிசுகளையும், மக்களையும், காப்பாற்றுவதற்காகவும் தங்கள் சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவும் தங்கள் பேரன் பேத்திகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக வும் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். ஆனால் நாங்கள் உங்களை காப்பாற்ற மட்டுமே உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம்.
கொரோனா வைரஸ் காலகட்டங்களில் உங்களுக்கு ஒருவனாக நான் இருந்து உங்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று அரிசி பருப்பு போன்ற நலத்திட்டங்களை வழங்கி உள்ளேன். பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்வதற்கு அறிக்கை வெளியிட வில்லை அரசாணையை வெளியிட்டுள்ளார் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
வைரஸ் காலகட்டத்தின் போது பொதுமக்கள் பொருளாதார சுமையில் இருந்தார்கள் என்பதை உணர்ந்து இந்த அரசு ரு. 2500 பொங்கல் பரிசாக அறிவித்து வழங்கியது. அதேபோல முதியோர் ஓய்வு ஊதியம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் அரசு அமைந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1500 தருவோம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. சிலிண்டர் விலையை குறைப்பது மட்டுமல்ல இனிமேல் விலையில்லாமல் 6 சிலிண்டரை இல்லங்களுக்கு கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அம்மா வீட்டுமனை திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு தரப்படும் என்பதில் மாற்றமில்லை. அம்மா திட்டத்தின் கீழ் இரண்டு சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு வீடு கட்டித் தரப்படும். இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பை நாம் பெற்றுள்ளோம்.
திமுகவின் தேர்தல் அறிக்கைகள் பெரிது பெரிதாக இருக்கலாம் உள்ளே பார்த்தால் ஒன்றும் இருக்காது. திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது காலி பெருங்காய டப்பா. இல்லத்தரசிகளுக்கு மாதம் 1500 ரூபாய் மற்றும் ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்பது எல்லாம் வெறும் சாம்பிள்தான் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசினார்.