தேர்தலில் திமுகவினர் சுணக்கம் காட்டினால் 24 மணிநேரத்தில் கட்டம் கட்டிவிடுவேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நயீமை ஆதரித்து வாரச் சந்தை ஜின்னா பாலம் அருகே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுகவினர் யாராவது தேர்தலில் சுணக்கம் காட்டினால், குறும்புத்தனம் காட்டினால், பொதுச் செயலாளர் என்ற முறையில் சொல்கிறேன், அவர்களை 24 மணி நேரத்தில் கட்டம் கட்டி விடுவேன்.
திமுக வேட்பாளர் வேறு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் வேட்பாளர் வேறு என்ற மனப்பான்மை திமுகவின் வரலாற்றை அறிந்த எவருக்கும் கிடையாது. இந்த இயக்கத்தை முதலில் தொட்டிலில் விட்டு ஆட்டி வளர்த்தது இந்த இஸ்லாமிய சமுதாயம் மேடைகள் தான். சுருக்கமாக சொன்னால் திமுகவின் வளர்ப்புத்தாய் இஸ்லாமிய சமுதாயம்.
இந்த ஆட்சி அகல நேரம் நெருங்கி விட்டது. 10 ஆண்டு காலம் ஒரு இருண்ட காலம். கொஞ்சம் கூட யோசிக்காமல் வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள். எவ்வளவு முட்டாள்தனமானது. முதலமைச்சர் எடப்பாடியார் ஒரு கூட்டத்தில் சொன்னார். ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் எல்லோருக்கும் 3 பேஸ் கனெக்சன் என்று. ஏப்ரல் 1ஆம் தேதி கடந்துவிட்டது. அவர் நம்மளை ஏப்ரல் ஃபூல் ஆக்க பார்த்திருக்கிறார்.
மிஸ்டர் எடப்பாடி ஏப்ரல் ஃபூல் நாங்கள் அல்ல; ஏமாறப் போவது நீங்கள் தான். சென்று வாருங்கள் என்று நான் வழியனுப்ப காத்திருக்கிறேன்” என்றார்.