திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிவார மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியில், 8 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆதரவு வேட்பாளர் சுபஸ்ரீ வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிவார மங்கலம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் இறந்த காரணத்தால், அங்கு தற்போது அப்பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் சாவித்திரி என்பவரும், திமுக சார்பில் சுபஸ்ரீ என்பவரும் போட்டியிட்டார்கள். இதில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுபஸ்ரீ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
10 வாக்குகள் வித்தியாசம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல், அதிமுக ஆதரவு வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை விடுத்ததால் மீண்டும் அங்கு வாக்குகள் எண்ணப்பட்டது. அப்படி எண்ணியதில் இத்தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 690 என்பதும், அதிக திமுக ஆதரவு வேட்பாளர் பெற்ற வாக்குகள் 349 மற்றும் அதிமுக ஆதரவாளர் சாவித்திரி பெற்ற வாக்குகள் 341 என்றும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, 8 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆதரவு வேட்பாளர் சுபஸ்ரீ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு வெற்றி பெற்ற சான்றிதழை வேட்பாளர் சுபஸ்ரீ பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் வெற்றி வேட்பாளருக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி, வெற்றி பெற்ற வேட்பாளரை திருவாரூர் நகரம் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்